Report : Admin | on November 21, 2011 | at 1:10 am

இந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு



(நபியே) உண்மையான இவ்வேதத்தை நாம் தான் உம்மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே நீர் அல்லாஹ் இறக்கிய இ(வ் வேதத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியும். மெளட்டீகக் காலத்து சட்டங்களையா இவர்கள் விரும்பிகின்றனர். மெய்யாகவே நல்லுறுதி பூண்ட மக்களுக்கு அல்லாஹ்வை விட அழகான தீர்ப்பளிப்பவர் யார்? – திருக்குர்ஆன் 5:48-50.

திருக்குர்ஆன் என்பது எழுதப்பட்ட வேதமோ, நூலோ அல்ல. அருளப்பட்டது. எந்த ஒரு சொல்லோ, எழுத்தோ, புள்ளியோ அருளப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அப்படியே இருக்கிறது. இறையருளால் அது எந்த மாற்றமும் இல்லாமல் நிலைத்து நிற்கும்.

நம்பிக்கையுள்ளவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கிற இறைவன், உலக மக்களை அறியாமையின் ஆழமான இருளிலிருந்து அறிவு ஞானத்தின் பிரகாச உச்சத்திற்கு அவனே வழிகாட்டியாக இருந்து அழைத்து செல்கிறான் என்பதை திருமறை நமக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. ஆனால் அவை பின்பற்றும் வேதங்கள் மூலப்பிரதிகள் இல்லாமல் மாற்றப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டு சிதைந்து நிற்கின்றன.

இறைவனால் அருளப்பட்ட மொழிகளில் காண முடியவில்லை. புத்தம், ஜைனம், சமணம் ஆகியவை இந்து மதத்தின் கிளைகள். சீனாவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றிலும் புத்த மதமும், சமண மதமும் செல்வாக்குப் பெற்றது. இலங்கையிலும் ஜப்பானிலும் புத்த மதம் செல்வாக்குப் பெற்றன. ஆனால், இன்றைய அறிவியல் தொழில்நுட்ப கலைகளின் வளர்ச்சியைத் தாக்கு பிடிக்க முடியாமல் மூலச் சட்டங்கள் முடமாகி வருகின்றன. பிற சமய கருத்துக்களின் தாக்கம் காரணமாகக் கிருத்துவ மதசட்டங்களின் நிலையும் கூட அப்படி ஆகிவிட்டன.

ஆனால் இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் ஒன்று தான் சவால்களை சமாளித்து பிரச்சினைகளை எதிர்கொண்டு தனித்தன்மையுடனும், தூய்மையுடனும் கம்பீரமாக நிலைத்து நிற்கிறது.

சட்டம் என்பது சமுதாயத்திற்குப் பணிவிடைகள் செய்யும் ஒரு கருவி. மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை அகற்றும் சாதனம். பல்வேறு சமுதாயங்கள் இணைந்து வாழ்வதற்கும், கொடுமைகள் களையப்படுவதற்கும், உரிமைகள் பேணப்படுவதற்கும், நீதி நியாயங்கள் நிலை நிறுத்துப்படுவதற்கும் பன்னாட்டு உறவுகள் ஒருமுகப்படுத்துவதற்கும் சட்டத்தின் துணை அவசியமாகிறது.

சட்டங்களினால்தான் மக்களின் நிர்வாகம் நடத்தப்பட்டு மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.

பாகிஸ்தான் நிறுவனர் முகம்மது அலி ஜின்னா வழக்கறிஞருக்கான கல்வி பெற பிரிட்டன் சென்ற போது பல கல்லூரிகளையும் பார்த்த பின் லிங்கன்ஸ் இன் (Lincoln’s Inn) என்ற கல்லூரியைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். அதற்கு என்ன காரணம் என்று கேட்ட போது “கல்லூரி வாசலில் பொறிக்கப்பட்டிருந்த வாசகத்தில் உலகில் தலைசிறந்த பத்து வல்லுனர்களில் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் இருந்தது தான் காரணம்” என்று சொன்னார். மனிதனால் இயற்றப்படுகிற சட்டங்கள் மனிதனின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப விளக்கங்களுக்கு உட்படுவதால் மக்கள் உள்ளத்தை அவை தொடுவதில்லை.

ஐரோப்பாவில் கிரேக்கச் சட்டங்களின் அடிப்படையிலேயே நடைமுறைச் சட்டங்கள் இருக்கின்றன. கிருத்துவம் தோன்றுவதற்கு முன்பு ரோமானியச் சட்டம் தான் உலகத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அந்த சட்டத்தின் அடிப்படையிலேயே கிருத்துவ சட்டம் சிலமாற்றங்களை கொண்டு வந்தது. உலகில் பெரும்பாலான நாடுகளிலும் பல சமய அரசுகள் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டன என்றாலும் அரசாங்க குற்றவியல் சட்டங்கள் பல குர்ஆன் நபிமொழி அடிப்படையில் உருவானது என்பது தான் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மையாகும். உதாரணம் விபச்சாரம், திருட்டு, மது.

‘தலாக்’ என்னும் விவாகரத்து என்பது காட்டுமிராண்டித்தனமானது. அநாகரிகத்தின் உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது. சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட உறவை மனிதன் மீறக்கூடாது என்றெல்லாம் சொல்லி வந்த இந்து சமுதாயத்தினர் விவாகரத்தை அனுமதித்தாக வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர். விவாகம் வணிகமாக மாறிய சூழ்நிலையில் கல்வி வளர்ச்சியும், பெண்ணுரிமை போராட்டங்களும் விவாகத்தின் அவசியத்தை வலியுறுத்தின.

வடநாட்டில் இராஜராம் மோகன்ராய், பாலகங்காதர திலகர் ஆகியோரும் தென்னாட்டில் பெரியார் ஈ.வே.ரா அறிஞர் அண்ணா போன்றவர்களும் இஸ்லாத்தில் உள்ளது போலவே அவசியம் ஏற்படும் போது இந்துக்களும் திருமண மற்றும் சொத்துரிமை இருக்க வேண்டுமென்று வாதிட்டனர்.

இதே போல இந்து மதத்தில் விதவைத் திருமணம் என்பது கிடையாது. பண்டைய காலத்தில் கணவன் இறந்தால் பெண்கள் உடன்கட்டை ஏறும் (சதி)பழக்கம் இந்துக்களிடம் இருந்தது. இறந்த கணவனை சுடுகாட்டில் படுக்க வைத்துக் கட்டைகளை அடுக்கி உயிரோடு இருக்கும் மனைவியையும் அவனோடு படுக்க வைத்து கொடூரமாக தீயிட்டு கொளுத்தி வந்தனர். இதனால் உடன்கட்டை ஏறுவதை தடுக்கும் சட்டம் (சதி சட்டம்) 1829 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. மனைவி இறந்து விட்டால் மறுமணம் செய்து கொள்ள முதுமை அடைந்தவனும் துடிக்கிறான். ஆனால் இளம் பெண்ணாக இருக்கும்போதே விதவையான இந்து மங்கைக்கு மறுமணம் செய்ய உரிமை கிடையாதே என்ற வேதனையில் அறிஞர்கள் பலர் விதவைத் திருமணங்களை அனுமதிக்க வேண்டும் என்று போராடியதன் விளைவாக இந்து சமுதாயத்திலும் ‘இந்து விதவை மறுமணச் சட்டம்’ இயற்றப்பட்டது.

ஆனால், மறுமணம் செய்து கொள்ளும் உரிமை மனித சமுதாயத்திற்கு இருக்க வேண்டும் என்ற புரட்சிகரமான கருத்தை மக்கள் ஏற்க வேண்டும் என்பதற்காகவே இறை தூதர் அண்ணல் முகமது நபி(ஸல்) அவர்கள் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தமது முதல் திருமணத்தை கதீஜா பிராட்டியார் என்ற விதவையுடன் செய்து கொண்டார்கள்.

இன்றைய உலகியல் சட்டங்களும், தீர்ப்புகளும் இஸ்லாமிய சட்டங்களை நோக்கி மாறிக் கொண்டிருக்கின்றன. இந்திய குற்றவியல் சட்டம் 302 வது பிரிவின்படி கொலை செய்வதற்கு

மரணதண்டனையோ ஆயுள் தண்டனையோ அபராதத்துடன் தண்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இறைவன் தன் திருமறையில் “முஃமின்களே! கொலை செய்யப்பட்டவர்கள் விஷயத்தில் பழிவாங்குதல் உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது (அல் குர்ஆன் 2:178)” என்று குறிப்பிடுகிறான்.

இப்படிப் பழிவாங்க சொல்லுவதின் மூலம் மனிதனை அழித்து விடுவது நோக்கமல்ல. இந்தக் கடுமையான எச்சரிக்கை மூலம் கொலைகள் தவிர்க்கப்பட்டு குற்றமற்ற அப்பாவிகள் நிம்மதியாக வாழ முடியும் என்பது மட்டுமே நோக்கமாகும்.

இஸ்லாமிய குற்றவியல் சட்டம் மனிதனை திருத்துவதற்கே முதலிடம் தருகிறது. சமூகத்திலிருந்து அவனை நீக்கப்பட வேண்டும் என்பது இறுதியான திட்டமாகவே இருக்கும்.

இந்திய சட்டத்துறையில் ஆரம்பகாலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை தரப்படவில்லை. இங்கிலாந்து நாட்டில் கூட கி.பி. 1870ம் ஆண்டில் தான் அந்த நாட்டின் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. இந்தியாவில் கி.பி. 1937 ம் ஆண்டில்தான் இந்து கூட்டுக் குடும்பத்தில் தான் முதன்முதலாக கணவனை இழந்த கைம்பெண் விதவைக்கு கணவனின் சொத்தை அனுபவிக்கும் உரிமை தரப்பட்டது.

1956 ம் ஆண்டு இந்து மரபுரிமைச் சட்டம் இயற்றப்பட்டு பெண்களுக்கு அனுபவிக்கும் முழுமையான உரிமை அளிக்கப்பட்டது.

1975ல் இயற்றப்பட்ட சட்டத்திற்கு பிறகே ஒருவர் இறந்தால் அவருடைய சொத்தில் மனைவிக்கும் உரிமை உண்டு என்ற நிலை உருவானது. இதையடுத்து தமிழக அரசும், மத்திய அரசும் இச்சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டு வந்தன.

1991ம் ஆண்டில் ஆண் பெண் வேறுபாடு இல்லாது பெண்களுக்கு சம உரிமையும் சொத்தில் பங்கும் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் வந்தது. இந்து மரபுரிமைச் சட்டம் புத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் முதலானோருக்கும் பொருந்தும். முஸ்லீம்கள், கிருத்துவர்கள், யூதர்கள், பார்சிகள் ஆகியோருக்கு தனியான சொத்துரிமை சட்டம் உண்டு.

இஸ்லாமிய மரபுரிமைச் சட்டத்தில் இரண்டு தலைப்புகள் காணப்படும். முதலாவது கணவன் அல்லது மனைவியும் பெண்களும் உறவு வழியினரும் சொத்துரிமை பெற அங்கீகாரம் பெறுகிறார்கள். இரண்டாவது பெற்றோரும் ஏழு முறை மூதாதையரும் ஆண்களின் வழித்தோன்றல்களும் சொத்துரிமை பெற தகுதி பெறுவார்கள். ஆக ஆண்களைப் போலவே பெண்களும் சொத்துரிமை பெற உலகத்திலே முதன் முதலாக வழிவகுத்த மார்க்கம் இஸ்லாம்தான் என்ற பேருண்மை வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இன்றைய இந்தியாவில் பெண்களின் உரிமைப் போராட்டம் காரணமாக இந்து வாரிசுரிமை சட்டத்தில் மாற்றம் செய்து பெண்களுக்கு சமபங்கு அளித்திருக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் இந்த மாற்றம் எதிர்பார்த்த பலனைத்தரவில்லை என்றே கூற வேண்டும். இச்சட்டத்தினால் குழப்பமே மிஞ்சுகிறது. எடுத்துக்காட்டாக இந்து வாரிசு உரிமை சட்டத்தின் திருத்தப்பட்ட ஷரத்துப்படி மகனுக்கும் மகளுக்கும் சம பங்கு தர வேண்டும். ஆனால் ஒரு பெண் தாய், சகோதரி, மனைவி, பேத்தி, பாட்டி என்ற உறவுகளில் இறந்தவருக்கு இருந்தால் அவர்களுக்கு எத்தனை பங்கு அளிக்க வேண்டும் என்பதற்கு எந்த குறிப்பும் காணப்படவில்லை. அதே நேரத்தில் இஸ்லாமிய பாகப் பிரிவினை சட்டத்தில் இவற்றிற்கெல்லாம் துல்லியமான கணக்கு உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.

உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கிற போர்கள், வன்முறை சம்பவங்கள் காரணமாக லட்சக்கணக்கான ஆண்கள் தினமும் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே இருக்கும் மக்கள் தொகையில் பெண்கள் விகிதாச்சாரம் மேலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இளம் வயதிலேயே விதவைகள் அதிகமாகிக் கொண்டு வருவதோடு கைக் கூலிக் கொடுமை காரணமாகவும் முதிர் கன்னிகள் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. பலதார மணம் இந்தியச் சட்டத்தில் ஆரம்பகாலத்தில் அனுமதிக்கப்படவில்லை. தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்படும் போது மனைவியின் ஒப்புதல் பெற்று, மனைவி இருக்கும் போதே மற்றொரு திருமணம் செய்து கொள்ள இந்திய திருமணச் சட்டம் அனுமதிக்கிறது. 1426 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பலதார மணத்தை இஸ்லாம் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதித்திருக்கிறது.

“நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் உங்கள் மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்துவது (எளிதில்) சாத்தியமாகாது. ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரங்கத்தில் தொங்கவிடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்” (அல்குர்ஆன் 4:129) என்ற அடிப்படையில் தான் மனைவியர்கள் யாவரும் சம அந்தஸ்துடன் நடத்தப்படல் வேண்டும் என்று இஸ்லாம் கடமையாக்குகிறது.

“ஆனால் நீங்கள் (உங்கள் மனைவியரிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று அஞ்சினால் ஒரு பெண்ணையே மணந்து கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 4: 3) என்பது ஒருதார வாழ்க்கையையே வலியுறுத்துவதையும் காணலாம். ‘இந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் ஆழமாகவும் முழுமையாகவும் எழுதினால் ஒரு ஆய்வு நூலாகவே வெளியிடும் அளவுக்கு கருத்துக்களும், செய்திகளும், ஆதாரங்களும் அதிகமாக இருக்கின்றன. அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கும், மதத்தில் நம்பிக்கையில்லாதவர்களுக்கும் ஒட்டு மொத்தமாக பொதுவான ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்று சிலர் வாதிடுகிறார்கள். விரும்புகிறார்கள். உண்மையைச் சொல்வதென்றால், உலக மக்கள் அனைவருக்கும் ஒரு பொது சட்டம் தேவை. அது மனிதனால் எழுதப்பட்ட சட்டமாக இருக்க கூடாது. அனைத்து உலகங்களின் இரட்சகனான இறைவனால் அருளப்பட்ட சட்டமாக இருக்க வேண்டும்.

ஷரீஅத் சட்டத்தை நோக்கியே உலகின் பல நாடுகள் தாங்கள் பின்பற்றி வருகிற சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து குழப்பத்தை நீக்கிக் குற்றங்களை குறைத்து வருகிறார்கள். வட்டியில்லாத பொருளாதாரம் வேண்டும். லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி நடைபெற வேண்டும். பல்வேறு பாவங்களுக்கு வித்திடும் மதுவை தடை செய்ய வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு தந்து அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; கடமைகளை உணர்ந்து உரிமையோடு மக்கள் வாழ வேண்டும்; சமய நல்லிணக்கம் செழித்தோங்க வேண்டும்; சகோதரத்துவம் மலர வேண்டும்; ஜாதி இன மொழி வெறி தலை தூக்காதிருக்க வேண்டும்; வறுமை ஒழிய வேண்டும்; மனித பண்புகள் பேணி காக்கப்பட வேண்டும்; உண்மையான ஆத்மீகம் மலர வேண்டும் போன்ற நன்மைகள் நாட்டில் வேரூன்ற வேண்டுமென்றால் ஷரீஅத் சட்டம் பொதுவான சட்டமாக உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்களானால் பண்டம் மலர்ந்து எங்கும் பயிர் செழிக்கும். சண்டைகள் ஓய்ந்து அனைவரும் சகோதரர் ஆவர். சாந்தி நிலவும்.

“ஷரீஅத்தை பேணி நட பாவத்தை தவிர்த்துக் கொள்; உலக ஆசாபாசங்களில் மூழ்கி விடாதே! அல்லாஹ் உனக்கு விட்ட விதியை நினைவுடன் ஏற்றுக் கொள்; இறைக் காதலை எல்லாவற்றிற்கும் மேலானதாகக் கருது” – இறைநேசரின் இப் பொன்மொழியை நினைவில் நிறுத்த நபி வழியில் நம் வாழ்வை அமைத்து நாயனின் நல்லருள் பெறுவோமாக !


0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News