மாநிலங்களவை உறுப்பினர்களாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகமது படேல், மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி மற்றும் 6 பேர் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.
சோனியா காந்தியின் அரசியல் செயலரான அகமது படேல் குஜராத் மாநிலத்தில் இருந்தும், சீதாராம் யெச்சூரி மேற்கு வங்கத்தில் இருந்தும் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மாநிலங்களவையில் அவைத் தலைவர் ஹமீது அன்சாரி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். அகமது படேல் ஹிந்தியிலும், யெச்சூரி ஆங்கிலத்திலும் பதவிப் பிரமாண உரையை வாசித்து பதவியேற்றுக்கொண்டர்.
இதுதவிர, குஜராத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவின் ஸ்மிருதி இரானி, திலீப் பாண்டே, மேற்கு வங்கத்தில் இருந்து தேர்வான திரிணமூல் காங்கிரஸின் பண்டோபாத்யாய, டெரக் ஓ பிரையன், சுகந்த்சேகர் ராய், சிருஞ்சாய் போஸ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதீப் பட்டாச்சார்யா ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டனர்.
மாநிலங்களவையில் புதிய உறுப்பினர்களை ஹமீது அன்சாரி வரவேற்றுப் பேசுகையில், அவை சிறப்பாக நடைபெற புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார்.
Section: Home > மாநிலங்களவை உறுப்பினர்களாக அகமது படேல், யெச்சூரி பதவியேற்பு.
0 Comments:
Post a Comment